Saturday, September 19, 2009

கடல் ஆய்வு செயற்கைக்கோள் செப். 23ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

நமது நாட்டின் கடல் பரப்பில் எங்கெல்லாம் மீன் வளம் உள்ளது என்பதையும், கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்யும் திறனையும் கொண்ட ஓசன்சாட்-2 என்ற செயற்கைக்கோளை வரும் 23ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ).பி.எஸ்.எல்.வி. என்றழைக்கப்படும் இந்தியாவின துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் 970 கி.கி. எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணி்ல் செலுத்தப்படுகிறது.மீன் வளம், கடலோரப் பகுதிகள் ஆய்வு, வானிலை மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் கூடிய ஓசன்சாட்-2 வரும் 23ஆம் தேதி மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இஸ்ரோ பேச்சாளர் எஸ். சத்தீஸ் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட ஓசன்சாட்-1 என்ற செயற்கைக்கோள் கடலின் உயிரி பரவல் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த செயற்கைக்கோளின் வாழ் காலம் முடிந்துவருவதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட வடிவான ஓசன்சாட்-2 செலுத்தப்படுகிறது.
Source: Webdunia

தென் ஆப்ரிக்கா சென்றது இந்திய அணி



மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் தோனி, சச்சின் உள்ளிட்ட இந்திய அணியினர், தென் ஆப்ரிக்கா சென்றனர். தென் ஆப்ரிக்காவில் வரும் 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளும், "பி' பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டன. இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த இந்திய அணியினர், நேற்று தென் ஆப்ரிக்கா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர். பின், துபாயிலிருந்து விமானம் மூலம் ஜோகனஸ்பர்க் செல்கின்றனர். இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் நாளை விளையாடுகிறது. வரும் 26ம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர்: தோனி (கேப்டன்), சச்சின், டிராவிட், காம்பிர், யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், யூசுப் பதான், அபிஷேக் நாயர், பிரவீண் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, ஆர்.பி. சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.

Source : Dinamalar

உலகம் முழுவதும் 100 கோடிபேர் பட்டினி கிடக்கும் நிலை : ஐ.நா. கவலை


உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

Source :வீரகேசரி இணையம் 9/18/2009 2:36:22 PM